Pages

Monday, July 25, 2011

'அப்போது வைகோ தமிழக முதல்வராக இருப்பார்''...நாஞ்சில் சம்பத்

திருவாரூர் & சங்கரன்கோவில்: தமிழீழம் வைகோவால் வரும். அப்போது வைகோ தமிழக முதல்வராக இருப்பார் என்று மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பிள்ளைகளுக்கு இன்று கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா இழைத்திருக்கின்ற இந்த வரலாற்று அநியாயத்தை, எனக்கு தெரிந்தவரையில் உலகத்தில் எந்த ஆட்சியாளர்களும் மக்களுக்கு எதிராக இப்படி செய்யமாட்டார்கள். காட்டுமிராண்டிகள் வாழும் காட்டில் கூட இப்படி ஒரு அநியாயம் நடக்காது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சமச்சீர் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு திட்டமிட்டு அவமதித்து வருகிறது என்றார்.

முன்னதாக சங்கரன்கோவிலில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எதிர்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தேர்தலில் மதிமுக வை ஜெயலலிதா புறக்கணித்தார்.

தமிழக அரசியலில் மதிமுக தஞ்சை கோபுரம், கொந்தளிக்கும் எரிமலை. தேர்தலில் நின்ற கட்சிகள் காணாமல் போய் விட்டன. தேர்தலை புறக்கணித்த பிறகும் உயிரோடு இருக்கும் கட்சி மதிமுக.

2016ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது தான் எங்கள் இலக்கு. எதிர்காலம் வைகோவின் காலமாகும். சட்டசபை தேர்தலில் மதிமுகவை ஜெயலலிதா புறக்கணித்ததற்கு காரணம் எதிர்க்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

சமச்சீர் கல்வி பிரச்சனையில் அரசுக்கு எதிராக கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. செய்த தவறுக்கு மக்கள் மன்றத்தில் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழீழம் வைகோவால் வரும். அப்போது வைகோ தமிழக முதல்வராக இருப்பார் என்றார்.

0 comments:

Post a Comment