'காபி வித் அனு' என டி.வி.யில் கடலை வறுக்கும் அனுஹாசனிடம் அவரின் இரண்டாம் திருமண வாழ்க்கை பற்றி அரட்டை அடித்தோம்....
ம்...என் கணவர் கிரகாமை பொறுத்தவரையில் கல்யாணத்திற்கு முன்பு, கல்யாணத்திற்குப் பிறகு அப்படிங்குற எந்த வித்தியாசமும் இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி ஃப்ரெண்ட்ஸா இருந்து ஜாலியா கலாட்டா பண்ணி சிரித்து நாட்களை கழித்தோமோ அப்படியேதான் கல்யாணத்துக்குப் பிறகும் வாழ்க்கை ஜாலியா போயிட்டிருக்கு.
உங்களின் வெளி நாட்டுக் கணவர் எப்படி இருக்கிறார்...? உங்களை நன்றாக புரிந்துகொண்டு நடக்கிறாரா...?
அவர் வெளிநாட்டுக் கணவராக இருக்கறதனாலதான் என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டு இருக்கார்ன்னு நினைக்கறேன். எனக்குன்னு வேலை, எனக்கான டைம், என் தனிப்பட்ட சுதந்திரம் இதெல்லாம் சரியா புரிஞ்சு வைச்சுருக்கார். சொல்லப்போனா இதெல்லாம் அவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்லைன்னுதான் சொல்லணும். அவர் மட்டுமில்லே...அவரோட அம்மா, அப்பாவோட புரிதல்கூட வித்தியாசமானதுதான்.
மாமனார் மாமியார் பற்றி....? நன்றாக பழகுகிறார்களா...?
கிரகாமின் அப்பா, அம்மா ரொம்ப க்யூட். அவங்களோட நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க ரெண்டு பேரும் நியூசிலாந்துல இருந்தாலும் அடிக்கடி இ-மெயில் மூலமா ஜாலியா அரட்டை அடிச்சு கேலி கிண்டலா பேசிக்குவோம். வருஷத்துல ஒரு மாசம் எங்களோட வந்து தங்கி இருப்பாங்க..
அப்போ நான் அவங்களுக்கு சின்னச் சின்ன கடைகளை சுத்திக் காண்பிப்பேன். மாமனார்-மாமியார் மாதிரி இல்லாம ஃப்ரெண்டோட அப்பா, அம்மா எப்படி இருப்பாங்களோ அப்படி ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க...எனக்கும் அவங்களை சமாளிப்பது சுலபமா இருக்கு...ஈஸி கோயிங்...
கிரகாமின் அம்மா அதாவது என்னோட மாமியார் என்னை தனியா கூட்டிட்டுப் போய் மூணு அட்வைஸ் கொடுத்தார். உன்னோட நண்பர்களை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்காதே...அவங்க உனக்கு ரொம்ப முக்கியம். இந்தியாவுல நீ இப்போ என்ன வேலை செய்யுறியோ கல்யாணத்துக்காக அதை விட்டுறாதே... உனக்குன்னு தனிப்பட்ட பொருளாதார வசதி ரொம்ப முக்கியம்.
இது போதும்...ன்னு உனக்கே தோனி வேலையை விடுறதுக்கும், கல்யாணம் ஆயிடுச்சேன்னு வேலையை விடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு... ஆனா என்னோட அட்வைஸ் என்னான்னா என்னைக்குமே உன் வேலையை விட்டுவிடாதே...இந்தியாவுல இல்லாட்டி இங்கிலாந்துக்கு வந்து வேலை பண்ணு...பணம் விஷயத்துல தெளிவா இரு...உனக்குன்னு தனி அக்கவுண்ட் இருக்கணும்ன்னு ஏகப்பட்ட அன்பு அட்வைஸ்...அவங்க வயசு அறுபத்தஞ்சு...இன்னும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க...
உங்களின் முதல் திருமண வாழ்க்கைக்கும், தற்போதைய இந்த இரண்டாம் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்...?
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இருக்குற வித்தியாசம் என்ன...? அதே மாதிரிதான். இப்போ இருக்குற வயசு, வாழ்க்கை கத்துக் கொடுத்திருக்குற அனுபவம், மெச்சூரிட்டி...இதெல்லாம் முன்பை விட ரொம்ப வித்தியாசம் இல்லையா...? இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை...மாற்றமே நிரந்தரம்.. அந்த மாற்றம் சந்தோஷமானதாக இருந்தா எல்லாம் நன்மைக்கே...
முதல் திருமணத்தில் நீங்கள் எதிர்பார்த்த திருப்தியான வாழ்க்கை இப்போது கிடைத்திருக்கிறதா...?
முதல் திருமணத்தைப் பொறுத்தவரையில் என்னிடமிருந்து மற்றவர்கள் நிறைய விஷயங்களை எதிர்பார்த்தார்கள். அவை அனைத்தையும் நான் பூர்த்தி செய்தேன். அந்த முயற்சியில் எனக்கு.. என்னுடைய எதிர்பார்ப்புகள் என்னென்னவோ... அதை மறந்துட்டேன்... ஆனா, இந்தத் திருமணத்துல காரணமற்ற..சுய நலமில்லாத எதிர்பார்ப்புகள் எங்க ரெண்டு பேர்கிட்டயும் கிடைக்குது. அதனால இப்போதைய வாழ்க்கை ரொம்ப அமைதியா போயிட்டிருக்கு..இது இப்படியே தொடரணும்ன்னு ஆசை.
குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதா....?
இந்த வயசுலயா...எதுக்குங்க வம்பு... சந்தோஷமா இப்படியே நாங்க இருந்துடறோமே... கலகலவென சிரிக்கிறார் அனுஹாசன்.
0 comments:
Post a Comment